சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்
இதுவரை ஒரே ஆண்டில் 33 சிக்ஸர்களுடன் நியூசிலாந்து ஜாம்பவான் மெக்கல்லம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஜெய்ஸ்வால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, இரண்டாவது நாள் முதல் செஷனில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. புதிய பந்தில் இந்திய அணி தடுமாறும் என்று ஆஸ்திரேலியா அணி பவுலர்கள் நம்பிக்கையுடன் களம் புகுந்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும், "இருங்க பாய்" என்று சொல்லும் வகையில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 2வது செஷன் முழுவதும் பேட்டிங் செய்து 84 ரன்களை குவித்துள்ளனர்.
தொடர்ந்து இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், இந்திய அணியின் முன்னிலையும் விரைவாக உயர்ந்தது. பின்னர் ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்த, இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் 124 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக அரைசதம் அடித்து சாதனை படைத்தனர்.
அரைசதத்தை கடந்த பின் இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரன் குவிப்பை விரைவுபடுத்தினார். பிட்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், முழுக்க முழுக்க பவுன்ஸை மட்டுமே ஆஸ்திரேலியா அணி நம்பி இருந்தது. ஆனால் ஜெய்ஸ்வால் எதனையும் கண்டுகொள்ளாமல் அதிரடியாக சில சிக்சர்களை அடித்துள்ளார்
அத்துடன் கம்மின்ஸ் பவுலிங்கில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசிய ஜெய்ஸ்வால், நேதன் லயன் பந்தில் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து அபாரமாக ஒரு சிக்சரை பறக்கவிட்டார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதுவரை நியூசிலாந்து ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் 2014ஆம் ஆண்டில் மட்டும் 33 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்து வந்தது.
மேலும் இந்த சாதனையை 34 சிக்சர்களை விளாசியதன் மூலமாக ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 2022ஆம் ஆண்டு 26 சிக்சர்களை விளாசியதன் மூலமாக பென் ஸ்டோக்ஸ் 3வது இடத்திலும், 2005ஆம் ஆண்டு 22 சிக்சர்களை விளாசியதன் மூலம் கில்கிறிஸ்ட் 4வது இடத்திலும், 2008ஆம் ஆண்டு 22 சிக்சர்களை விளாசியதன் மூலம் சேவாக் 5வது இடத்தில் உள்ளனர். இந்த ஆண்டில் இன்னும் 3 போட்டிகளில் ஜெய்ஸ்வால் விளையாட இருப்பதால், சிக்சர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.