முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான பாதுகாப்பு 30 பேர் வரையில் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இதேவேளை, தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எழுதிய கடிதம் ஒன்றில் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு (Ravi Seneviratne) எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.