மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய பொதுநூலக ஊழியர் ஒருவர் மேலும் ஒருவர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணமல் போயுள்ளது.
இந்நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் தேடுதல் நடத்தி வந்த நிலையில், நேற்று (29) பிற்பகல் நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து நூலகத்திற்குள் சென்று பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளையும், பசு மாட்டின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றையதினம்(30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.