மாவீரர் நினைவேந்தல்கள் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முடியாது. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினை மற்றும் படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது.
இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட தமது பிள்ளைகளை, உறவுகளை அவர்களின் சொந்தங்கள் நினைகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் எனக் காட்ட முற்படவும் கூடாது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பின் இலட்சினை, படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.