தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக அஜித்தின் துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியானது. தொடர்ந்து அவரது நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச் வினோத் துணிவு படத்தையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியிருந்த துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்திருந்தது.
இந்தப்படத்தில் மஞ்சுவாரியர் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டிலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீசிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கை அஜர்பைஜானில் தொடர்ந்து நடத்த முடியாததால், 6 மாதங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதனிடையே, தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில பேட்ச் வேலைகளை இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்தப் படத்தால் அஜித்தின் அடுத்தப்படமான குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் 2025 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் திட்டமிட்டபடி பொங்கல் ரிலீசாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிக்கட்டத்தில் குட் பேட் அக்லி படம்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்தப்படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது ஸ்பெயினில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படம் விடாமுயற்சிக்கு முன்னதாகவே ரிலீசாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. எது எப்படியோ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் படம் ரிலீசாவது மட்டும் உறுதியாகியுள்ளது. அது விடாமுயற்சியா அல்லது குட் பேட் அக்லியா என்பதை தயாரிப்புத் தரப்பு விரைவில் உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.