சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவிற்குத் இலங்கை தெரிவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஐ.நா பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவுசெய்யப்பட்ட 31 உறுப்பு நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் குழுவிலிருந்து இலங்கை ஒரு ஆசனத்திற்கு போட்டியிட்டு 177 வாக்குகளைப் பெற்றது. ஆசிய பசுபிக் குழுவிற்குள் கிடைத்த இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் என்பதுடன், 31 உறுப்பு நாடுகளில் ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாகும்.
மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகியவை ஆசிய பசிபிக் குழுவிலிருந்து UNCITRAL க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பு நாடுகளாகும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆறு வருடங்களுக்கு இலங்கை அதில் பணியாற்றும்.
1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், வியன்னாவில் அதன் தலைமையிடம் காணப்படுகிறது. இது சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட அமைப்பாகும். வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒத்திசைத்தல் ஆகியவை இதன் பணிகளில் அடங்கும்.
மேலும் UNCITRAL உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது. இலங்கை மத்தியஸ்த சட்டம் மற்றும் மின்னணு பரிவர்த்தனை சட்டம் போன்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கான இலங்கையின் சட்டம் UNCITRAL இன் மாதிரி சட்டங்களால் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.