2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வர முடியாது என இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ தெரிவித்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள .
கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்றதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளிடையே இருக்கும் உரசல்கள் காரணமாகவும் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்த்து வருகிறது. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வர முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா ஆடும் போட்டிகளை பொதுவான வேறு நாட்டில் நடத்துமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டதாகவும், துபாயில் போட்டிகளை நடத்தலாம் என ஆலோசனை கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 11-க்குள் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட வேண்டும் என்பதால் இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகம் துபாயில் தான் உள்ளது. எப்போது எந்த கிரிக்கெட் தொடரை நடத்த முடியவில்லை என்றாலும் உடனடியாக துபாய் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்தத் தொடரை நடத்த ஏற்பாடு செய்வது கிரிக்கெட் உலகில் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.
எனவே, துபாயில் இந்தியா ஆடும் போட்டிகளை நடத்துவது அனைத்து தரப்புக்கும் ஏற்புடையதாகவும், எளிதானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கும் இந்த மாற்றத்துக்கு ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில், பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை சீரமைப்பதற்காக பல நூறு கோடிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு செலவு செய்திருக்கிறது.
எனவே, மற்ற அணிகள் ஆடும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவதன் மூலம் இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தியாக பாகிஸ்தான் காட்டிக் கொள்ளலாம். அதே சமயம், இந்தியா விளையாடுவதால் இந்த தொடருக்கான வருமானம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு மிகப்பெரிய லாபத்தையும் ஈட்டித் தரும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.