முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் வநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா (Asath Maulana) வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
அதில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தமை தொடர்பிலேயே சிஐடியிநர் தொடர்ந்தும் விசாரித்து வருகின்றனர்.