பங்களாதேஷ் (Bangladesh) 17 வயதின் கீழ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை 17 வயதின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆகாஸ் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் தம்புள்ளை அணிக்காக விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ்பேசும் வீரராக ஆகாஸ் இடம்பெற்றுள்ளதுடன், அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரியின் வீரர் கித்ம விதானபத்திரன மற்றும் உப தலைவராக சென். ஜோசப் கல்லூரியின் செனுஜ வெகுங்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 8ம் திகதி நிறைவடையவுள்ளது.
மேலும், யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரஞ்சித் குமார் நியூட்டன் மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரரான குகதாஸ் மாதுளன் ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.